இலங்கையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 24 ஆக அதிகரிப்பதற்கு தேசிய புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான அதிகார சபை தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டளவில் இதற்கான சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்டத்திற்கமைய புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் மற்றும் அது தொடர்பான பிரசாரங்களில் ஈடுபடக்கூடியோரின் ஆகக் குறைந்த வயதெல்லை 21 ஆக உள்ளது.
எனினும் இந்த வயதெல்லையை உயர்த்துவதற்கும், புகையிலை சார்ந்த பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களில் மேலும் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்கள் உட்பட இணையத்தில் பரவி வரும் புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.