January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

67 வயதுடைய இராசேந்திரம் இராசலட்சுமி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் தனது மகனுடன் வசித்து வந்த இந்தப் பெண், கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக மூன்று வருடங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

பின்னர் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்த நிலையில், நேற்று முதல் அவர் காணாமல் போயிருந்தார்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அவரின் உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதன்படி அந்தப் பெண்ணை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில விசாரணைகளை தொடர்ந்த பொலிஸார், சந்தேகத்தில் அந்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதுடைய நபரொருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய, கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் அங்கிருந்து குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.