November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏ-5 வீதியின் பிபிலையில் இருந்து செங்கலடி வரையிலான பகுதி திறந்து வைப்பு

சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட ஏ-5 வீதியின் பிபிலையில் இருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோ மீட்டர் பகுதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனையில் இருந்து பதுளை – ஊடான செங்கலடி வரையிலான வீதி 275 கிலோமீட்டர் நீளத்தை கொண்டது.

இந்த விதியின் பிபிலை முதல் செங்கலடி வரையிலான வீதி விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது.

இந்த வீதி அபிவிருத்தியின் போது, நிலங்களையும் சொத்துக்களையும் இழந்த பிபிலை, ரிதீமாலியத்த, பதியத்தலாவ மற்றும் மஹாஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவு மக்களுக்கு 12.4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இன்று நடைபெற்ற வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாளேந்திரன், சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாத், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.