November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில்வே போராட்டத்தால் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு!

இலங்கையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில்கள் ஊடான எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஒருவார காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ரயில் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், 27 ஆம் திகதி முதல் தமது போராட்டதை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன்படி நேற்று இரவு முதல் ரயில்கள் மூலம் எரிபொருள், கோதுமை மா, சுண்ணக்கற்கள் மற்றும் சீமெந்து என்பவற்றை கொண்டுசெல்லும் நடவடிக்கைகளில் இருந்து தமது உறுப்பினர்கள் விலகியுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நாட்டுக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தில் 40 வீதமானவை ரயில்கள் ஊடாகவே இடம்பெறுகின்றன. இதன்படி நாளொன்றுக்கு 35 இலட்சம் லீட்டர் எரிபொருள் ரயில்கள் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. அவற்றில் 14 இலட்சம் லீட்டர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தால் இந்த விநியோகம் தடைப்பட்டு நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.