ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ரயில்வே திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதனால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதற்கு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
ரயில்வே ஊழியர்களின் இடமாற்றம், ரயில் சமிக்ஞை கட்டமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு, 7 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தீர்மானித்தனர்.
இந்நிலையில் அதிகாரிகளுடன் இன்று முற்பகல் பேச்சுவார்த்தைக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தமையினால் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
எனினும் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே இணக்கப்பாடு இல்லாத காரணத்தினால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் தமது போராட்டத்தை தொடர்வதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் போராட்டத்தால் நாடு முழுவதும் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என்று கூறப்படுகின்றது.