இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல்வாதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக சம்பவங்களை உருவாக்குவதுடன், அவ்வாறு இல்லையென்றால் ஏற்படும் சம்பவங்களை அவர்களின் அதிகார தேவைக்காக பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி டிசம்பர் 25 ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் மக்கள் கருத்தறியும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதன்போதே ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது செயலணி முன்னிலையில் கருத்துக்களை முன்வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஞானசார தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதியின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுள்ளதுடன், குறித்த காலத்துக்கு முன்னதாகவே குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிது காலம் சென்றாலும், அனைத்து மக்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கின்ற மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளை முன்வைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.