
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இது தொடர்பில் சுற்றறிக்கையொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்யும் ஒவ்வொரு இலங்கையரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு முன்னர், இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யும் போது விசா அனுமதி பத்திரம், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஆகியன இருந்தால் போதுமானதாக இருந்தது.
எனினும் தேசியப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் வெளிநாட்டவரை திருமணம் முடிக்கும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி சான்றிதழை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமது நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட, எந்தவித குற்றங்களுடனும் தொடர்புடையவர் இல்லை என்று உறுதிப்படுத்திய சான்றிதழை இலங்கையில் பதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.