அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்திமலை பொலிஸ் நிலையத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று மாலை ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ஜனவரி 6 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சந்தேக நபர், தனது விடுமுறை தொடர்பான பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு நேற்று இரவு அங்கு சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் பின்னர் அவர், தனது பிரத்தியேக வாகனத்தில் அத்திமலை பகுதிக்கு சென்றுள்ளதுடன், பின்னர் டி-52 ரக துப்பாக்கிகள் இரண்டையும் அவற்றுக்கான 19 ரவைகளையும் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு அங்கு சரணடைந்துள்ளார்.
பின்னர் அவரை கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.