January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எம்.பிக்களுக்கு 6 மாத சம்பளம் வேண்டாம் எனக் கோரிக்கை!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் 6 மாத சம்பளத்தை திறைசேரிக்கு வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தனது 6 மாத சம்பளத்தை மக்களுக்காக வழங்குவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற செயலாளரிடம் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் குட்டியாராச்சி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் 6 மாத சம்பளத்தை அரச திறைசேரிக்கு அனுப்ப முடியுமாக இருந்தால் பொருளாதார பிரச்சனைக்கு சிறியளவிலேனும் தீர்வு கிடைக்கலாம் என்பதுடன், அது முன்மாதிரியான நடவடிக்கையாகவும் இருக்கும் எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.