இலங்கைக் கடலில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மீனவர்களினால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு முன்னால் இருந்து பேரணியாக சென்ற மீனவர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ-9 வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தை நடத்தியதால் அந்த வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இவ்வேளையில் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழையும் அனைத்து இந்தியப் படகுகளையும் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள், அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
இதன்போது, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.