
இலங்கையில் இருந்து இரானுக்கு அதிகளவில் தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் இரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் அலிரெஸா பேமன்பெக் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், நேற்று இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
2016ஆம் ஆண்டளவில், இரானின் சந்தையில் 47 சதவீதமாக காணப்பட்ட இலங்கையின் தேயிலை, 2020ஆம் ஆண்டில் 25 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம், இலங்கையின் தேயிலையை இரானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்குமென பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், இரானின் தேசிய எரிபொருள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான நீண்டகால கடனைத் தீர்ப்பதற்கான பொறிமுறையும் இந்த உடன்படிக்கை மூலம் தயாரிக்கப்படவுள்ளது.