July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு”: மனோ கணேசன்

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு எனவும், இந்த ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்கிவிட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. இது ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல. இம்மாநாட்டில், இறுதி வடிவமான தமிழ் பேசும் கட்சிகள் சார்பான ஆவண நகல் தயாரிக்கப்பட்டு தற்போது கட்சி தலைவர்களின், இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட இம்மாநாடு உண்மையில், இது “நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த, சமகாலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது, தமிழ் பேசும் கட்சிகளின் இந்த செயற்பாட்டின் இறுதி கட்ட ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களுக்கு, அவர்களது இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவண நகலில், பாரத பிரதமருக்கான கடிதமும் தமிழ் பேசும் மக்கள் இன்று எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகளின் பட்டியலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய ஒன்றுகூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றின. கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே. ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.