July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடித தலைப்பில் மாற்றம்!

தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதற்காக தயார் செய்த கடிதத்தின் தலைப்பில் மாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

“13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்” என முதலில் தலைப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்” என மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தும் வகையில் பொது ஆவணத்தை தயாரிப்பதற்கு தமிழ்க் கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இது தொடர்பில் நேற்று கொழும்பில் கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில் அங்கு பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளளன.

இந்நிலையில் இது தொடர்பில் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுமந்திரன், அது தொடர்பான கடிதத்தின் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய வரைவுதயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது. இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சில ஊடகங்கள் தொடரந்தும் தவறான தலைப்பில் செய்திகளை வெளியிடுவதனால் இந்த அறிக்கையை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.