இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவை கட்டணங்களும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர்வடையும் நிலையேற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி நிலைமையை தொடர்ந்தே இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பஸ் கட்டணத்தை 30 முதல் 35 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதேபோன்று ஆட்டோ கட்டணத்தை முதல் கிலோ மீட்டர் தூரத்திற்கான பயணக் கட்டணத்தை 50 ரூபாவில் இருந்து 80 ரூபாவாகவும், அதற்கு அடுத்த கிலோ மீட்டர் ஒவ்வொன்றுக்குமான கட்டணத்தை 45 ரூபாவாகவும் அதிகரிக்க ஆட்டோ சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அத்துடன் பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகன கட்டணங்களை அதிகரிப்பதற்கும் அது தொடர்பான சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவேளை பொருட்களை கொண்டு செல்லும் கொள்கலன்கள் போக்குவரத்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் 20 வீதத்தால் அதிகரிப்பதற்கு கொள்கலன் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து மற்றைய பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கான நிர்ணய விலைகளை தளர்த்துவதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் அந்தப் பொருட்களின் விலைகளிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் மரக்கறி விலைகளையும் பெருமளவில் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.