November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்க் கட்சிகளின் பொது ஆவணம் இன்னும் தயாரிக்கப்படவில்லை!

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை தமிழரசு கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரதான ஆவணத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் யோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளதே தவிர இது பொது ஆவணம் அல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆவணத்தை இறுதிப்படுத்தும் பொறுப்பு தன்னிடமே வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த நடவடிக்கைகள் இன்னமும் முழுமைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் குறித்த ஆவணம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும், எம்.எ. சுமந்திரன் மாற்றுக்கருத்தையே முன்வைத்திருந்தார்.

அரசியல் தீர்வு மற்றும் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும், இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்க தயாரிக்கப்படும் ஆவணம் குறித்து ஆராய்ந்துவருகின்றோமே தவிர இன்னமும் இது இறுதிப்படுத்தப்படவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த கட்டங்களில் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

அதேபோல் இலங்கை தமிழரசு கட்சி முன்வைத்துள்ள எட்டுப்பக்கங்களை கொண்ட ஆவணமே பிரதான ஆவணமாகும். இதில் ஏனைய தரப்பினர் தயாரித்த ஆவணத்தில் விடயங்களை கருத்தில் கொண்டு அவற்றில் இருந்து மூன்று பந்திகள் மாத்திரமே எமது பிரதான ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இது பொதுவான ஆவணம் அல்ல, இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த பிரதான ஆவணத்தில் சில திருத்தங்கள் என்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்த வேலைத்திட்டங்கள் இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார்.