July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை ஜனாதிபதியுடன் அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான பணிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸ் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நடத்திய சந்திப்பின் போதே அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய உற்பத்திகளை இலங்கைக்கு கொண்டுவந்து பெறுமதி சேர்த்து, மீள் ஏற்றுமதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் கெரன் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

பசுமை விவசாயம் தொடர்பான இலங்கையின் கொள்கையைப் பாராட்டிய அமைச்சர், அவுஸ்திரேலியாவும் நிலைபேறான விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2022ஆம் ஆண்டில், 75 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்த நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எடுத்த நடவடிக்கைகளை அன்ட்ரூஸ் பாராட்டியுள்ளார்.

இதன்போது 11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் உதவியை இலங்கையில் கொவிட் தடுப்புச் செயல்முறைக்கு வழங்கியதை ஜனாதிபதி நினைவு கூர்ந்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, மனித கடத்தலை நிறுத்துவதற்கு அப்போதைய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக ஸ்கொட் மொரிசன் செயற்படுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை இரு நாடுகளும் மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.