January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் மனுவில் இருந்து மனோ கணேசன் விலகினார்

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் மனுவில் இருந்து தான் முழுமையாக விலகிக்கொள்வதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவின் விடுதலைக்கான மனுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து  எழுந்த விமர்சனங்களை அடுத்து, இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா விடுதலை குறித்த மனு ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்ட பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த மனுவொன்றை முன்வைக்கும் நோக்கிலேயே தான் கையெழுத்திட்டதாகவும், அது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பெரும்பான்மை சிங்கள மக்களின் புரிதலுடன் மாத்திரமே தீர்க்க முடியுமென்பதே தனது கருத்தாகும் என்றும் மனோ  சுட்டிக்காட்டியுள்ளார்.

துமிந்தவின் விடுதலைக்காக 150க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்த நிலையில், 100க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் கையொப்பமிட்டதாகவும் மனோ கணேசன் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து மனுவொன்றை முன்வைக்க தான் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் கேட்டதாகவும், இது அதற்குப் பொருத்தமான நேரமல்ல என்று சுமந்திரனும், இவ்விடயம் தொடர்பாக கரிசனை எடுப்பதாக  அடைக்கலநாதனும் கூறியதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துமிந்த சில்வாவின் மனுவில் தான் கையெழுத்திட்டதன் பின்னுள்ள காரணத்தை புரிந்துகொள்ளாமல், ஒரு சிறு பிரிவினர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதால் அந்த மனுவில் இருந்து தான் முழுமையாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மனுவில் இருந்து விலகும்  தீர்மானம் தனது தனிப்பட்ட தீர்மானமே எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தீர்மானம் அல்லவெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.