கடந்த தினங்களில் தரமற்ற எரிவாயு நிரப்பப்பட்ட கப்பல்கள் இரண்டு நாட்டிற்கு வந்துள்ளதாகவும், தரமற்ற எரிவாயு இறக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
லுணுகம்வெஹர பெரலஹெல பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்புக்கு உள்ளாகி ஏற்பட்ட சேதம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு சென்று ஆராய்ந்து பார்த்தார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவக்கும் போதே, இவ்வாறு தெரிவத்துள்ளார்.
தரக் கட்டளைகளையும் மீறி எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக் வேண்டாம் என்று தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்திருந்த போதிலும், அவ்வாறான எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரமற்ற எரிவாயுவை சந்தைக்கு விநியோகித்து மக்களின் உயிர்களை பணயம் வைப்பது அரசாங்கத்தின் அநியாயகரமான செயற்பாடு என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இடம்பெறும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.