January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

கொரோனா

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டுமென சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம்      வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழலை வெற்றிகொள்ள முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கத்துக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் மரணிப்போரை, அவரவர் மத அனுஷ்டானங்களின்படி இறுதிச் சடங்குகளை செய்வதற்கு  உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை முஸ்லிம்கள் அவர்களது மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களின் உடல்கள்  தகனம் செய்யப்படும்நிலையும்  உருவாகியுள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உட்பட அண்டை நாடான இந்தியாவிலும் கூட உரிய முறைகள் பின்பற்றப்பட்டு அடக்கம் செய்வதற்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்த முஸ்லிம்கள் எரியூட்டப்படும் நடைமுறை இஸ்லாமியர்களை மனதளவில் பாதித்துள்ளதையும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமூகத்தின் மத உரிமையையும்,அவர்களது  மனநிலையையும் கவனத்தில் கொண்டு மரணித்தவர்களை அடக்குவதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.