நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது அவசியம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விலை அதிகரிக்கப்படாவிட்டால் நாட்டில் எரிபொருளை அதிகம் பயன்படுத்தாத மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மே மாதம் 68 டொலர்களாக உயர்வடைந்த போது நாட்டில் எரி பொருளின் விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது கச்சா எண்ணெயின் விலை 85 டொலர்களாக உயர்வடைந்துள்ள நிலையில், இது 24 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் மீது வரி அதிகரிப்பு விதிக்கப்படும். இதனால் சாதாரண மக்களும் அதற்காக வரியை செலுத்த வேண்டி நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே, எரிபொருளை உபயோகிப்பவர்களிடமிருந்து அதனை அறவிட நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும் இது குறித்து இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.