இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநா உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, இலங்கையில் செயற்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
“இலங்கையில் மிகச்சிறந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் காணப்படுகிறது” என விக்னராஜா பாராட்டியுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு பின்னரான பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடிய விக்னராஜா, இலங்கைக்கு உதவுவதற்கு ஐநாவுக்கு பல வழிகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐநாவுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய மகிந்த ராஜபக்ஷ, அது எதிர்காலத்திலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.