October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரின் தீர்மானங்கள் நாட்டிற்கு ஆரோக்கியமானதாக அமையவில்லை’

நாட்டின் நிதி நெருக்கடிக்கான தீர்வுகள் என்னவென்பது குறித்து அரசாங்கத்திற்குள் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்த தெளிவும் அரசாங்கத்திற்குள் இல்லையெனவும், நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் ஒரு சில தீர்மானங்கள் ஆரோக்கியமான மட்டத்தில் அமையவில்லை எனவும் வெளிப்படையாக விமர்சிக்கும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, நாட்டின் நிதி நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே எமக்கிருக்கும் ஒரே தீர்வு எனவும் கூறினார்.

நாட்டின் நிதி நெருக்கடி நிலைமைகளில் நாம் முன்னெடுக்க வேண்டிய ஆரோக்கியமான வேலைத்திட்டங்கள் என்ன, சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது நட்பு நாடுகளை நாடுவதா என்பது குறித்து ஆரோக்கியமான மட்டத்திலான கலந்துரையாடல் அரசாங்கத்திற்குள் இடம்பெறவில்லை.அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுடனும், நிபுணத்துவம் பெற்றவர்களிடமும் இது குறித்து வெளிப்படையாக எவரும் பேசவில்லை.அமைச்சரவைக்குள் மாத்திரம் இந்த விடயங்களை பேசுவதால் வெளியில் உள்ள நல்ல கருத்துக்கள்,அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியாது.

இப்போது, நாடு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது மட்டுமே இருக்கும் ஒரே தீர்வாகும்.தீர்வு எனக்கூறுவதை விடவும் நெருக்கடி நிலைமைகளை தடுக்க எமக்குள்ள ஒரே வழிமுறை இதுவாகும் எனக்கூறலாம்.சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் தொடர்ச்சியாக உறவை கையாண்டு வருகின்றோம். அதேபோல் நட்பு நாடுகளிடம் சென்றாலும் கூட சகலரும் எம்மை நம்பப்போவதுமில்லை.சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவில் அமைந்துள்ள காரணத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் மீது சந்தேகம் கொள்ளத்தேவையும் இல்லை.சகல நாடுகள் குறித்தும் அவர்களின் அக்கறை, தெளிவு மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கப்படுகின்றன.யுத்தம் முடிவுக்கு வந்ததுடன் நாம் சர்வதேச நாணய நிதியத்தை நாடினோம், அவர்களிடம் பெற்றுக்கொண்ட கடனையும் செலுத்தினோம்.

அரசாங்கத்திடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், நாடு நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்ற நிலையில் அதனை தீர்க்க மேலும் நெருக்கடிகளை உருவாக்கும் கொள்கையையே அரசாங்கம் வகுத்து வருகின்றது என்றார்.