February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுகத்தில் சிக்கியுள்ள உணவு கொள்கலன்களை விடுவிக்க 25 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவு கொள்கலன்களை விடுவிப்பதற்காக 25 மில்லியன் டொலர்களை வழங்க மத்திய வங்கியின் ஆளுநர் இன்று (16) இணங்கியுள்ளார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 25 மில்லியன் டொலர்களை நாளை (17) முதல் விடுவிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க இணங்கியுள்ளார்.

இதனிடையே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களுக்கு இடையில் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் மத்திய வங்கி ஆளுநரை தொடர்புகொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட இறக்குமதியாளர் ஒருவர் இதுகுறித்து பேசுகையில், வர்த்தக அமைச்சரின் தலையீட்டினால் டொலர்களை விடுவிக்குமாறு மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், விரைவில் டொலர் கிடைத்தால் கொள்கலன்களை விடுவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், டொலர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டால் கொள்கலன்களை விடுவிக்க முடியும் எனவும் பிரதான இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.