November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : சட்டத்தரணி ஹிஜாஸ் தொடர்பான வழக்கு 2021 பெப்ரவரி வரை ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வழக்கு விசாரணைகள் 2021 பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் குறித்த விசாரணைகள் நேற்று இடம்பெற இருந்த நிலையில், கோட்டை நீதவான் பிரியந்த லியனகே வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 அசாதாரண சூழ்நிலைகள் காரணமாகவே வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட ஹிஜாஸ், 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் 90 நாட்களுக்கு அவரைத் தடுத்து வைப்பதற்கான மூன்றாவது தடுப்பு உத்தரவும் கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு, அவரது குடும்பம் மற்றும் சட்டத்தரணிகளுக்கான அணுகல் மறுக்கப்பட்டு வருவதாகவும், எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஊர்ஜிதமாகாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் தாமதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோவுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.