தூய்மையான அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் எமது பரந்த வேலைத்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி, வடக்கு, கிழக்கு தமிழ் தலைமைகள் மற்றும் மலையக கட்சிகளை ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.ஆனால் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரு மேடையில் ஒன்றிணைய முடியாது என்பது கட்சியின் தெளிவான நிலைப்பாடு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ராஜபக்ஸவினரின் அரசாங்கம் உருவாகியபோது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்த போதிலும் இன்று மக்களால் இந்த நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் நாடு வீழ்ச்சி கண்டுள்ளது.மக்களால் நாளாந்த வாழ்க்கையை வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.அடுத்த ஒரு சில ஆண்டுகளில் நாடு மோசமான நெருக்கடி நிலைமையை சந்திக்கப்போகின்றது என்ற அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது.ஆகவே இந்த நிலைமைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பலர் எம்முடன் இணைந்துகொள்ள தயாராக உள்ளனர்.ஆனால் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாரில்லை.அவர்களின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே அரசாங்கம் வீழ்ச்சி கண்டது.எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தனி அரசாங்கமே உருவாக்கப்பட வேண்டும்.இது நீண்டகால போராட்டமாக அமையாது. அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை அமைப்போம்.அதுவே எமது இலக்கு.அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.