July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயக்குனராகவே விரும்புகிறேன்; நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட், ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹிந்தியில் நடித்துள்ள அத்ரங்கி ரே’ திரைப்படம் வரும் 24 ஆம் திகதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து தற்போது இந்தப் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலிகான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி-சீரிஸ் நிறுவனம் வழங்க, கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள அத்ரங்கி ரே படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகர் தனுஷ் தனக்கு நடிப்பதை விட, இயக்குவதில் தான் விருப்பம் என கூறியுள்ளார்.

அதேபோல் இசைஞானி இளையராஜா தனது கடவுள் எனவும், தலைவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே எனவும் நடிகர் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

தனது அப்பாவுக்கு சமைத்துக் கொடுப்பது மிகவும் பிடித்தமான செயல் என நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் என்பது அழகான ஒரு தெய்வீகமான கலை என புகழ்ந்துள்ளார்.

தனது அப்பா விரும்பியதால் தான் நடிக்க வந்ததாகவும் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

சமையலைத் தவிர தனக்கு பிடித்தமான விஷயம் இளையராஜாவின் இசை என கூறியுள்ள தனுஷ், இளையராஜா சார் தான் தனது கடவுள் எனவும், அவர் தான் தனக்கு அம்மா, தாலாட்டு எல்லாமே எனவும் மெய்யுருகியுள்ளார்.

ஒரு படம் எத்தனை விருதுகளை வென்றாலும் அதற்கான பாராட்டுக்கள் அனைத்துமே இயக்குனரைத் தான் சேரும். ஆகவே அந்த இயக்குனராகவே தான் விரும்புவதாக தனுஷ் கூறியுள்ளார்.

தன்னுடன் அத்ரங்கி ரே’ படத்தில் நடித்துள்ள நடிகை சாரா அலிகான் தன்னை தலைவா என்று அழைத்ததாக கூறியுள்ள தனுஷ், அவ்வாறு தன்னை அழைக்க வேண்டாம் என அவரிடம் தெரிவித்ததாகவும் தலைவர் என்றால் ரஜினி சார் மட்டும் தான் எனவும் தனுஷ் கூறியுள்ளார்.

அவ்வாறு கூப்பிட்டால் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அதனை விரும்பமாட்டார்கள் எனவும் சாராவிடம் லட்சம் முறை சொல்லி விட்டதாகவும் தனுஷ் நேர்காணலில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள அத்ரங்கி ரே’ திரைப்படம் காமெடி கலந்த ஒரு திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.ஆகவே வெகு சீக்கிரத்தில் தனுஷ் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம் .