November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை பலப்படுத்திய முப்படை”; பாதுகாப்புச் செயலாளர்

கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தை கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இன்று நாட்டின் பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை.அதனால் எவரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் ஒரே பலமான வலையமைப்பாக  செயற்படுவதாகவும் கமல் குணரத்ன கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த ஆட்சியின் போது  உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப் படவில்லை எனவும் இதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு இராணுவ மயமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஓய்வுபெற்ற சில இராணுவ அதிகாரிகள் அரசாங்கப் பதவிகளை வகிப்பது ஒருபோதும் இராணுவமயமாக்கல் அல்ல என்றார்.

அத்தோடு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பல வருடங்களாக பெற்றுக் கொண்ட தமது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை புரிவது ஒரு தவறான விடயமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, கொவிட் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.