சீன உரக் கப்பலுக்கு வழங்கப்பட வேண்டிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை தவறு இழைத்தவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த தொகையை ஒரு நாடு என்ற ரீதியில் மக்கள் செலுத்த வேண்டியதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இன்று (15) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அரசாங்கம் செய்யும் அனைத்து விடயங்களும் சரியானது என்பதை ஏற்றுக்கொள்ள தான் தயாரில்லை எனவும், எது தவறு என்று கூறுவதற்கு தாம் பயப்படவில்லை எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடுமையான டொலர் நெருக்கடி நிலவும் இவ்வேளையில் இவ்வாறான கொடுப்பனவுகளை வழங்குவது நாட்டுக்கு பாரிய இழப்பு என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பொறுப்பானவர்களிடம் இருந்து குறித்த தொகையை மீட்பதற்கு கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
உர நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அழிவுகளை இன்று அனைவரும் அனுபவித்து வருவதாக ஜயசேகர குறிப்பிட்டார்.