July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக ஒரே நாளில் இருவர் பதவி ஏற்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் இருவர் மாறி மாறி பதவியேற்றுள்ளனர்.

மாநகரசபை ஆணையாளராக கடமையாற்றி வந்த எம்.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக பொறியியலாளர் ந.சிவலிங்கம் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று காலையில் தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, பிற்பகல் புதிய ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்ற ந.சிவலிங்கத்துக்கு பதிலாக மீண்டும் முன்னாள் ஆணையாளர் எம். தயாபரன் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டதுடன், அவர் பிற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக எம்.தயாரான் இரண்டு வருடங்களாக கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில், மாநகரசபை முதல்வருக்கும் ஆணையாளருக்கும் இடையே மாநகரசபை செயற்பாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

ஆணையாளருக்கு சபையினால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் பல, சபையினால் மீளப்பெறப்பட்டது.

ஆணையாளருக்கு எதிராக மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்ததுடன், ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றம் இடைகால உத்தரவையும் வழங்கியிருந்தது.

மேலும், ஆணையாளர் நீதிமன்ற தடை உத்தரவை மீறி செயற்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை மாநகரசபை முதல்வர் மட்டு. மேல் நீதிமன்றத்தில் தாக்குதல் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த ந.சிவலிங்கம் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, அவர் இன்று மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் பிரதி ஆணையாளர் உ. சிவராசா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் முன்னிலையில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் பிற்பகல் புதிய ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டவருக்குப் பதிலாக மீண்டும் ஆணையாளராக எம்.தயாபரனை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார்.

அவர் தனது கடமையை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.