October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவு

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவுக்கான அமர்வு இன்று (15) முற்பகல் 10 மணிக்கு நகர சபை மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கடந்த செப்ரம்பரில் புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றது.

அதில் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டார். எனினும் அவர் கடந்த மாதம் சமர்ப்பித்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டதால் பதவியிழந்தார்.

இந்த நிலையில் மீளவும் இன்று தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

இன்றைய தெரிவில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அவர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் வெளிநடப்புச் செய்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.