இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிகளுக்கு அமைவான எரிவாயுவை மாத்திரம் தாம் விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சிலிண்டர்களை மீளப்பெற உத்தரவிடுமாறு சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டரின் கலவை மற்றும் அது சிலிண்டரில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கமளிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோவுக்கு இன்று வரை கால அவகாசம் வழங்கியிருந்தது.
எரிவாயு சிலிண்டரின் கலவை, அந்த கலவை சிலிண்டரில் தென்படும் சாத்தியக்கூறுகள் மற்றும் தற்போது சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா என நீதிபதிகள் குழாம் நேற்று பிரதிவாதிகளிடம் கேட்டுள்ளனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதிவாதிகளின் சட்டத்தரணி, ‘லிட்ரோ இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிகளுக்கு அமைவான எரிவாயுவை மாத்திரம் மக்களுக்கு விநியோகிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.