July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றாலும் எம்மால் சாதகமான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது’

புதிய வேலைத் திட்டமொன்றை உருவாக்கி அதன் மூலமாக சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொறிமுறை என்னவென்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை.இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றாலும் எம்மால் சாதகமான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.

இலங்கையின் வருவாயில் மாதாந்தம் அண்ணளவாக 6-7 பில்லியன் வருமானம் பெற்றுக்கொள்ளப்படும்.ஆனால் கடந்த மாதத்தில் 300 மில்லியன் டொலர்களினால் எமது வருமானம் குறைவடைந்துள்ளதாக எமக்கு கிடைத்த தரவுகளுக்கு அமைய அவதானிக்க முடிகின்றது.ஆகவே இது நாட்டில் பாரிய தாக்கத்தை உருவாக்கும்.

இப்போது மிகக் குறைவான வெளிநாட்டு கையிருப்பே எம்முடம் உள்ளது.1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகக்குறுகிய தொகையை எமது கையிருப்பில் வைத்துக்கொண்டு பொருளாதாரத்தை இயக்க முடியாது. அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி 500 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளதுடன், அடுத்த கட்டங்களில் அதிகளவான கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.

இப்போது உள்ள நிலைமைகளை அவதானிக்கும்போது இந்தியா அல்லது சீனா எமக்கு ஏதேனும் உதவிகளை செய்தாலே தவிர வேறு எந்தவொரு வழியிலும் எம்மால் மீள முடியாது.ஆகவே சீனாவையோ இந்தியாவையோ சார்ந்து ஏதேனும் ஒரு பாரிய விட்டுக்கொடுப்பை செய்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது என்றார்.