வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரம் நடைபெற்றதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறீதரன் எம்.பி, அந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
”நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடமாகாணம் சார்ந்த கூட்டத்தில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே நான் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன்” என கூறிவிட்டு அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம், கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு தமிழில் மொழிபெயர்ப்பு இன்றி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மாத்திரம் கருத்துக்கள் பகிரப்படுவதாக சிறீதரன் எம்.பி எதிர்ப்பு வெளியிட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கூறுகையில், “எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்வதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று நான் கேட்டபொழுது செய்கின்றோம் பார்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால் அதன்பின்னர் ஒரு மணி நேரம் அங்கே இருந்த போதும் எந்த விதமான மொழி மாற்றத்திற்கான ஆயத்தங்களும் நடைபெறவில்லை” என்றார்.
”எத்தனையோ ஆயிரம் பேர் இந்த மண்ணில் இறந்ததற்கு அடிப்படை மொழி ரீதியான பிரச்சினையே ஆகும். இதனாலேயே மாகாணசபை முறைமை தோன்றியது. நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வடமாகாணசபையிலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை. ஆகவே நான் இந்த கூட்டத்தில் இருப்பதில் பிரயோசனமில்லை என்று கருதுகிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.