January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் (14) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும்’ போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா கருத்து தெரிவிக்கையில், இன்றைய தினம் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்திப்பதாக அறிவித்திருந்தார்கள்.

ஆனால், அந்த தகவலின்படி இதுவரை நேரமும் அவர்கள் வருகை தரவில்லை. எந்தவித ஆணைக்குழுக்களும் தேவையில்லை, உள்ளக விசாரணைகளும் தேவையில்லை, சர்வதேச விசாரணையே தேவையென 12 வருடமாக போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்’எத்தனையோ ஆணைக்குழுக்கள் வந்தும் பதிவுகளை மேற்கொண்டு செல்கிறார்களே தவிர, எந்தவிதமான நீதியும் வழங்கப்படவில்லை.

தொடர்ச்சியாக அதே வேலையை தான் செய்கின்றார்கள். எங்களுக்கு நீதியே கிடைக்க வேண்டும், நீதிக்கு பின்பு தான் எது என்றாலும். சர்வதேச விசாரணையே வேண்டும்’ என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

This slideshow requires JavaScript.