November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன உரக் கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலரை வழங்க இலங்கை தீர்மானம்!

சீன உர நிறுவனத்திற்கான 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சீன நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பாதிப்பில்லாதவாறு, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரால் இது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கப்பலில் சேதனப் பசளை கொண்டுவரப்பட்ட நிலையில், அந்தக் கப்பலில் இருந்த உரத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய பக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவித்து அந்த உரத்தை இலங்கை நிராகரித்ததுடன், தரமான உரத்துடன் வந்தால் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் உரத்திற்கான கொடுப்பனவை வழங்க வேண்டுமென சீன நிறுவனம் கோரிய நிலையில், அதற்கு எதிராக இலங்கை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இலங்கை கடல் எல்லையில் பல நாட்களாக தொடர்ந்தும் சுற்றிக்கொண்டிருந்த குறித்தக் கப்பல் கடந்த வாரத்தில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இவ்வாறான நிலைமையில், இரு தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாதவாறு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை வழங்குவதற்கு, நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.