(Photo : hpb.health.gov)
டெங்கு மற்றும் கொவிட் தொற்று நோய்களை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இலங்கை சிக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறும் அவர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகிய ஆண்டாக 2020 பதிவானதாக குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டில் குறிப்பாக நவம்பர் மாதத்தில் பதிவான நோயாளர்கள் எண்ணிக்கை கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வைத்தியர் ருவன் விஜயமுனி மேலும் கூறினார்.
தற்போது கொழும்பிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், பண்டிகைக் காலத்திற்கு முன்னர் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு தொற்று நோய்களும் ஒரே நேரத்தில் அதிகரிக்குமானால் நாட்டின் நிலைமை நிச்சயமாக பயங்கரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, மக்கள் சுகாதார விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதோடு, தொற்று நோயைத் தணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.