ஜனாதிபதி செயலணி என்ற பெயரில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசாங்கம் எடுக்கும் கபளீகர செயற்பாடுகளை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமாயின், அரசியல் அமைப்பில் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
மாகாண சபைகள் இயங்காதுள்ள தருணத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, ஜனாதிபதி செயலணி என்ற போர்வையில் மத்திய அரசாங்கம் பல்வேறு செயலணிகளை அமைத்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு எத்தனிக்கும் கபளீகர நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அரசியல் அமைப்பில் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு தேர்தல் முறைமையில் இருக்கின்ற மாற்றத்தை ஒரு சாட்டாக கூறிக்கொண்டு தேர்தலை இழுத்தடிப்பு செய்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல், ஆளுநர்களின் தலைமையில் மாகாண ஆட்சியை நடத்திக்கொண்டு அதன் மூலமாக அரசாங்கத்தின் திட்டமிட்ட மறைமுக நிகழ்ச்சி நிரலை சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பாக நடைபெறுகின்ற விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் சவால்களை குறித்து நாட்டின் சகல கட்சிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்திய தலைமைகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் சரிவர நிறைவேற்றப்படுவதில் தாமதம் இருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் தாமதப்படுத்தாது அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்றார்.