November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சமஷ்டி ரீதியிலான எமது அரசியல் தீர்வை பெற்றே தீருவோம்’; விக்கினேஸ்வரன் தெரிவிப்பு

சமஷ்டி தீர்வு எமது குறிக்கோளாக என்றென்றும் இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் அதனை பெற்றே தீருவோம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் அதன்போது மேலும் கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவதாக அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் புதிய அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தின் முழுமையான சரத்துக்களை உள்ளடக்கினால் கூட அல்லது அதற்கு மேலதிகமாக வேறு காரணிகளை உள்ளடக்கினால் கூட இந்தியாவின் உள்ளீடல் இல்லாது போய்விடும்.தற்போதைய 13 ஆம் திருத்தச்சட்டம் இருப்பதன் காரணமாகவே இந்தியா இந்த விடயங்களில் கரிசனையை காட்டக்கூடியதாக அமைந்துள்ளது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் இந்தியா இலங்கையிடம் கேள்வி எழுப்ப முடியும்.இப்போதும் இந்தியாவினால் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுவிட்டு அவற்றை இலங்கை புறக்கணிக்கின்றது என்ற குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்துள்ளது.அவ்வாறான நிலையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் 13 ஆம் திருத்தச்சட்டம் இருக்கும் வரையில் மட்டுமே இந்தியாவின் தலையீடு காணப்படும்.

அதேபோல் தற்போது சட்ட புத்தகத்தில் இருக்கும் 13 ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதே எமது கோரிக்கையாகும். அது எமது நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு பதிலான ஒன்றல்ல. அரசியல் தீர்வு எனும் போது அது கூட்டு சமஷ்டி ரீதியிலான ஒரு நிரந்தர தீர்வேயாகும்.

அந்த தீர்வை எடுக்கும் வரையில் தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்த காரணம் என்னவெனில், அது இல்லாது போய்விட்டால் நிரந்தர தீர்வுக்கு பாடுபடும் மக்களே இல்லாது போய்விடுவார்கள்.

இன்று எமது மக்கள் நாட்டை விட்டு செல்கின்றனர், காணிகள் பறிபோகின்றன,வாழ்வாதாரம் பறிபோகின்றது.ஆகவே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் தீர்வான சமஸ்டியை கைவிட்டுவிட்டோம், அல்லது கூட்டு சமஸ்டியை கைவிட்டுவிட்டோமே என கூறுகின்றனர். சமஷ்டி தீர்வு எமது குறிக்கோளாக என்றென்றும் இருக்கும். ஒரு காலகட்டத்தில் அதனை எடுத்தே தீருவோம். ஆனால் தற்போது இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என கோருவதன் காரணம், அது நடைமுறைப்படுத்தாமல் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகள் மாகாணசபைகளை செயற்படுத்தாது மாகாண சபைகளுக்கான உரித்துக்களை மத்திய அரசாங்கம் அனுபவித்துக் கொண்டுள்ளன.

இதனால் பலவிதமான பிரச்சினைகளை எமது மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இவற்றை ஏதேனும் ஒரு விதத்தில் நிறுத்துவது என்றால் அதற்கு எமக்கு சில அதிகாரங்கள் தேவை, 13 ஆம் திருத்தமே எமக்கு இருக்கும் ஒரே ஒரு பாதுகாப்பாகும். அதனையும் நாம் கைவிட்டுவிட்டால் மிக மோசமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும்.

எனவே தான் இந்தியாவின் ஆதரவு தேவைப்படுகின்றது. ஆகவே தான் இந்தியாவிடம் நாம் மிக முக்கியமான ஒரு விடயத்தை எடுத்துக்கூறவுள்ளோம்.அதாவது எமது நிரந்தரத் தீர்வை நாம் கைவிடவில்லை, அது சமஷ்டி அடிப்படையில் அல்லது கூட்டு சமஷ்டியாக இருக்கும்.

ஆனால் தற்போதைய ஒற்றையாட்சியின் கீழ் எமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இந்தியா அதற்குரிய ஒத்துழைப்புகளை எமக்கு வழங்க வேண்டும். இதியாவுடன் இணைந்து எழுதிய உடன்பாடு கைவிடப்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்தியா அரசாங்கத்துடன் பேசி இதற்கு தீர்வு வழங்க வேண்டும் என்றார்.