File Photo
இலங்கையில் மிக மோசமான நிதி நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச கடன்களை கொடுப்பதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே ஆலோசனையை எதிர்கட்சிக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய 18ஆம் திகதிக்கு முன்னர் பிரதான எதிர்கட்சியினர் இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொண்டதுடன் 2020 ஆம் ஆண்டு வரையிலான இடைக்கால வேலைத்திட்டமொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
அதற்கு இணங்கிய விதத்தில் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவி வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வேலைத்திட்டத்தின் பிரதான தீர்மானங்களை இரத்து செய்திருந்தது .
இந்நிலையில் அதன் தற்போதைய நிலவரம் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி நிலைமைகள் குறித்து அறிந்துகொள்ளும் விதமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த வாரம் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வரவு செலவு திட்ட விவாதத்தின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசார நிகழ்வின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வாவிடம் நிதி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குறிப்பாக தற்போது அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமையில் ஏதேனும் ஒரு விதத்தில் கடன் வழங்கும் தவணைகளை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை மட்டுமே முன்னெடுக்க முடியும் எனவும், அது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் எதிர்க்கட்சி தலைவருக்கு இந்த பேச்சுவார்த்தைகளின் பங்குபற்றி நாட்டை மீட்கும் விதமான ஒத்துழைப்புகளை வழங்கும் கடமை உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், எதிர்க்கட்சி விரும்பினால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுத்து நாட்டின் நிலைமைகளை சுட்டிகாட்டி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்குங்கள் எனவும் நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த வேளையிலும், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த நேரத்திலும் சர்வதேச நாணய நித்திய உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்களை கையாளும் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.