இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்று அமைச்சரவையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூடவுள்ளது.
இதன்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரையும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் தற்போது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வெளிநாட்டு நாணயங்களே கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் நாடு கடுமையாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் என்றும், இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.