January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் 43 நபர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்களை கேட்டறிந்தனர்.

கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.