July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிரந்தர தீர்வை காணும் வரை 13 வது திருத்தம் பாதுகாக்கப்பட வேண்டும்’; தமிழ், முஸ்லிம் கட்சிகள் உறுதி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் வரை அதிகாரப் பரவலாக்கங்களை உள்ளடக்கிய 13 வது திருத்தம் பாதுகாக்கப்படவேண்டும் என்று தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று  கொழும்பில் நடத்திய சந்திப்பின் போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை அரசாங்கம், இன்று மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைத்து மாகாணங்களின் அதிகாரங்களை கபளீகரம் செய்வதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தமிழ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

எனவே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவின் உதவியைக் கோரி, கூட்டு ஆவணம் ஒன்றை இந்தியாவிடம் கையளிக்கவுள்ளதாகவும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தம் இறுதி தீர்வாகாது.அதற்கு அப்பால் செல்லவேண்டும். எனினும் இலங்கையின் சட்டத்துக்குள் உள்ள 13வது திருத்தத்தை அமுல் செய்து காட்டுமாறு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இறுதிப்போரில் இலங்கை வெற்றி பெற உதவிய இந்தியாவுக்கும் சவால் விடுக்கின்றோம்’ என்று இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேபோல், இங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறுகையில், “ராஜபக்ஷ அரசாங்கத்தின் கபளீகர நடவடிக்கைகள் முற்றுப்பெற வேண்டுமாயின் அரசியல் அமைப்பிலுள்ள அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மாகாண சபைகளின் முடக்கத்தை தமக்கு சாதகமாக, கோட்டாபய – மகிந்த தலைமையிலான அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.