January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு நெருக்கடி

இலங்கையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு இன்னும் கிடைக்கவில்லை என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, லிட்ரோ நிறுவனம் புதிய நியமங்களின் கீழ் சந்தைக்கு சமையல் எரிவாயுவை விநியோகித்தாலும், நுகர்வோர் பழைய கையிருப்பின் கீழ் கொள்வனவு செய்த எரிவாயு சிலிண்டர்களை மீள ஒப்படைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, டிசம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்குமாறு சில தினங்களுக்கு முன்னர் நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

எவ்வாறாயினும், சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ள இத்தருணத்தில் இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பது சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சீல் உடைக்கப்படாத, பிரச்சினைக்குரிய எரிவாயு சிலிண்டர்களை மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் அவற்றை கொண்டு வந்த போது, புதிய சிலிண்டரை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களிடம் கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்திடம் ஏற்கனவே வினவப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.