ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எங்கிருந்தாலும் எந்த தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மன்னிக்க முடியாத தவறை இழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மினுவாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கடந்த அரசாங்கம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள், அதனை பொறுப்பேற்க வேண்டியவர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பொறுப்பை ஏற்கவேண்டும். அறிந்தோ அறியாமலோ அந்த தகவல்களை மறைத்து தாக்குதல் நடக்க இடமளித்தமை பாரிய குற்றமாகும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் பின்னர், அதனுடன் தொடர்புடைய விடயங்களை பாராளுமன்றத்தில் தனது தரப்பினரை பயன்படுத்தி மறைக்க மேற்கொண்ட முயற்சிகளை தான் எதிர்த்ததாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவு என்னை விசாரணைக்கு அழைத்தாலும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் செயற்பட வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நடந்த சம்பவத்திற்குஅப்போதிருந்த ஜனாதிபதி மட்டுமல்ல அப்போதைய பிரதமர் மற்றும் பொலிஸ் அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரும் பொறுப்பாளி என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் கூறியுள்ளார்.