January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைவிலங்கைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

கைவிலங்கைப் பயன்படுத்தி பொலிஸார் எனத்  தெரிவித்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபரொருவர் கொழும்பு – கிருலப்பனை பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என்றும், இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி – சென்லோரன்ஸ் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இருந்த நபரைப் அச்சுறுத்தி, கைவிலங்கிட்டு அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்தை தொடர்ந்தே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனை தொடர்பில் சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் அங்கிருந்து கைவிலங்கைத் திருடிக்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் பம்பலப்பிட்டிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சி.சி.ரி.வி. காட்சிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடமிருந்து ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணமும், 40 இலட்சம் ரூபா பெறுமதியான கார், கத்தி, கைவிலங்கு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.