November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதில்லை’: ஜீவன் தொண்டமான்

‘நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன்’ என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதனால்தான் கடந்த ஆட்சியில் முழுமைப்படுத்தப்படாத வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்தி, மக்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சு மூலமான புதிய வேலைத் திட்டங்கள் ஜனவரி முதல் ஆரம்பமாகும் என்றும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எதையும் செய்யவில்லை என சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். புதுமையாக நான் எதையாவது செய்வதாக இருந்தால் அரசியல் பழிவாங்கலில் தான் ஈடுபட்டிருக்க வேண்டும். அதை நான் செய்யவில்லை. முழுமைப்பெறாத நிலையில் இருந்த திட்டங்களை முழுமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினேன்.

நான் அமைச்சு பதவியை ஏற்கும்போது அந்த அமைச்சு 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாய் கடன் சுமையில் இருந்தது. நல்லாட்சியின் போது 4 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 699 வீடுகள்தான் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

நான் அமைச்சு பதவியை ஏற்ற பின்னர் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை இம்மாதத்துக்குள் கையளிக்கப்படும்”

என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.