
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட்- 19 தடுப்புக் குழுவின் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு 3 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் பூஸ்டர் டோஸினை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, நாளை முதல் தடுப்பூசி போடப்படும் எந்த இடத்திலும் பூஸ்டர் டோஸ் மற்றும் பைசர் தடுப்பூசியை பெற்றக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது பதிவாகி வரும் பெரும்பாலான கொவிட் தொற்றாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எனவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொவிட் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, 16- 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒப்புதலை வழங்குமாறு கொவிட் -19 குழுவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
12- 15 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.