June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வழமைக்கு திரும்பியது நுரைச்சோலை அனல் மின் நிலையம்!

Electricity Power Common Image

நுரைச்சோலை அனல் மின்  உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் பிரதான மின் பிரப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.

மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட போதிலும், மின் கட்டமைப்பு முழுடையாக சீர்செய்யப்படாததன் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதால், மீண்டும் தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.