July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நியு போட்ரஸ் நிறுவனத்துடன் நிதி அமைச்சு மேற்கொண்டுள்ள உடன்படிக்கை என்ன?’

நியு போட்ரஸ் நிறுவனத்திற்கும் அரசாங்க திறைசேரி செயலாளருக்கும் இடையிலான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் என்ன என்பதையும், இந்த உடன்படிக்கை பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் சரத்துக்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் சபைக்கு அறிவிக்க வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ நினைத்த அனைத்தையும் முன்னெடுக்கவோ, மக்களுக்கு தெரியாது மறைமுகமாக தீர்மானம் எடுக்கவோ, மக்களுக்கு தகவல்களை மறைக்கவோ அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நியு போட்ரஸ் நிறுவனம் மற்றும் திறைசேரி செயலாளருக்கு இடையிலான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் குறித்தும், அதனை பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தியிருந்தேன். உடன்படிக்கையை சபைப்படுத்துவதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்தது.இந்த உடன்படிக்கையில் ஒரு சரத்து உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உடன்படிக்கை பொதுமக்கள் பார்வைக்கு விடுவதில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

இது உண்மையா என தெரிந்துகொள்ள வேண்டும்.நிதி அமைச்சருக்கு விடயப்பரப்பு குறித்து அதிகாரங்கள் இருப்பது உண்மையே.ஆனால் அவர் மக்கள் ஆணையின் ஒரு பகுதியையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.ஆகவே அவர் நினைத்த அனைத்தையும் முன்னெடுக்கவோ, மக்களுக்கு தெரியாது மறைமுகமாக தீர்மானம் எடுக்கவோ, மக்களுக்கு தகவல்களை மறைக்கவோ உரிமையும் இல்லை.நாடுகளுக்கு இடையில், நாட்டின் வலுசக்தி குறித்து ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வரும் வேளையில் அதனை பாராளுமன்றம் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.