
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை சுஹூரு பாயவில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டுக்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பும் நடவடிக்கைகளை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற கணக்குகள் தடை செய்யப்படுகின்றன.
அதுமாத்திரமின்றி, சட்டவிரோதமாக நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் எனவும் உரிய முறையில் நாட்டுக்கு பணத்தை அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் சட்டவிரோதமான கணக்குகளுக்கு தடை விதிப்பதற்கான அதிகாரம் காணப்படுவதாகவும், யுத்த காலத்திலும் இவ்வாறான கணக்குகள் தடை செய்யப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, உரிய முறையில் பணத்தை அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் டொலர் பிரச்சினை இருந்த போதிலும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மத்திய வங்கி தேவையான தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.